சந்தோசம் திரும்ப வருமா?

மாரி மழையில் தவளைகள் மார்க்கு மார்க்கு என்று கத்த மச்சான்! வாடா எலி அடிப்போம் என்று புறப்பட்டது ஒரு படை. பிடித்ததோ எட்டு எலி என்னடா மச்சான் செய்வம் என்று  என் முகத்தை எல்லோரும் பார்க்க எங்கம்மா சொன்னது ஞாபகம் வந்தது கிடாய் நல்ல எடை போட்டு விட்டது என்று அதையே இழுத்து வந்து சாப்பிட்ட சந்தோசம் திரும்ப வருமா?

 

நத்தார் வரப்போகின்றது என்று ஊரெங்கும் மாவிடிக்கும் சத்தம் கேட்க அண்ணன் பட்டாசு  வேணுமா? சட்டை வேணுமா? என்று கேட்க பட்டாசு தான் வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கி வந்த புந்திரிகளை இரவோடு இரவாக கொளுத்தி இடையிடயே அம்மாச்சி சுட்ட வட்டிலப்பம் பாலப்பம் சாப்பட்டு விட்டு அடுத்த நாள் போட புது உடுப்பு இல்லாமல் சுவாமியின் பிள்ளையாக பூசையில் உதவிய சந்தோசம் திரும்ப வருமா?

 

சரியாக 5 மணிக்கு பந்தடிக்காத கூட்டமொன்று கொடிமரத்தில் குந்தி இருந்து குழாய் பம்மில் தண்ணி எடுக்க வந்த பெட்டைகளை பார்த்த சந்தோசம் திரும்ப வருமா?

 

தண்ணி குழாயடியில் சண்டை என்றவுடன் அடித்த பந்தை அப்பிடியே போட்டு விட்டு சண்டையில் புதினம் பார்க்க போன சந்தோசம் திரும்ப வருமா?

 

அதிகாலையில் யாருமே இல்லை என்று குளிக்கலாம் என்றால் தண்ணீர் கைக்கெட்டும் தூரம் வாளியில்லை என்று எண்ணிய போது டமாரென்று ஒரு சத்தம் ஆள் உள்ளே உள்ளாடையும் வெளியாடையும் வெளியே ஆகா என்று எல்லோரும் குதிக்க அங்கே வந்த அக்கா யாரையும் காணோம் என்று ஏக்கத்தோடு எட்டி பார்க்க அலறியடித்து அக்கா ஒரு பக்கம் ஓட நாங்கள் போட்டது பாதி போடாதது பாதியாக ஓடிய சந்தோசம் திரும்ப வருமா?

 

சம்மாட்டிமார்கள் எல்லாம் நேத்தி வைச்சு வள்ளம் நிறைய மீன் பிடித்து வர கோயிலில் இரண்டு வரிசையில் அமர்ந்து இரண்டு பீங்காங்களை வைத்து விட்டு ஒன்று   எனக்கு மற்றது அம்மாக்கு என்று சொல்லி கஞ்சி குடிச்ச சந்தோசம் திரும்ப வருமா?

 

பாடசாலை விடுமுறையில் பம்பலாய் கலங்கட்டி வலைக்கும் ஓல வலைக்கும் சென்று பழஞ்சோற்றுடன் சுட்ட மீன் சாப்பிட்ட சந்தோசம் திரும்ப வருமா?

 

கொண்டாட்டம் என்று சொல்லி குளத்தில் இருந்த தாராவை குழம்பாக்கிய சந்தோசம் திரும்ப வருமா?

 

தொட்டம்மாவுக்கும் தொட்டப்பாவிற்கும் தோத்திரம் சொல்லிவிட்டு கிடைத்த காசில் நூடில்ஸ் வாங்கி வந்து என்ன செய்வதென்று தெரியாமல் நிக்க கோழியை கொண்டு  வாங்கோ சமைத்து தாறேன் என்று கோக்கி சொல்ல பக்கத்து வீட்டு அன்ரியின் குருட்டு கோழி குறுக்க செல்ல எட்டி பிடிக்க பின்னால் செல்ல சர சரவென சத்தம் கேட்ட அன்ரி என்னடா செய்யீறீங்க என்று குருட்டு கோழியை விட சாவல் ருசி அதிகம் என்று சாவல் தர அதை சமைத்து சாப்பிட்ட சந்தோசம் திரும்ப வருமா?

 

மாம்பழக்குருவிக்கு பின்னால் கூட்டாமாய் ஓடிச்சென்று அது உயர்ந்த தென்னை மரத்தில் உட்கார்ந்து இருக்க சிவப்பு கலர் என்றவுடன் எனக்கு சிரிப்பு வருகிறது சிவப்பு கலர்  மட்டும் தெரிய ஆளை ஆள் தள்ளி மாம்பழக்குருவியை அடித்த சந்தோசம் திரும்ப வருமா?

 

வவுனியாவில் உதைபந்தாட்டம் கப்போடு வருவார்கள் என்று ஊரெல்லாம் கொண்டாட்டம் விளையாட்டு தொடங்க விசிலடித்து விட்டார்கள் பள்ளிமுனை வீரர்களை காணவில்லை மாட்டு வண்டிலில் மைதானத்தின் நடுவில் வந்து நிற்க இறங்கிய வீரர்கள் ஒருவரை ஒருவர் பிடித்து கொண்டு விறைப்பாக நிற்க விறு விறுப்பாக விளையாட்டு தொடங்கியது பள்ளிமுனை வீரர்களுக்கு மட்டும் பந்து இரண்டாக தெரிய அடித்த கோளில் பாதி அவுட்டுக்கு போக இறுதி விசில் என்றதும் மல்லாக்க படுத்தவர்களுக்கு  மறுநாள்  தாங்கள் தான் வென்றது என தெரிந்த  சந்தோசம் திரும்ப வருமா?

 

மாதாவின் மங்களத்தை ஆண்பிள்ளைக்கு பதிலாக பெண் பிள்ளை அதிகம் வேண்டும் என்று பாடியதால் ஊரெல்லாம் பெண்பிள்ளை பிறக்க ஆளுக்கு இரண்டு மூன்று என்று கட்டிய சந்தோசம் திரும்ப வருமா?

 

“தொடரும்”

”நெய்தல் ராணி”

( யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல நினைவுகளை மீட்டி பார்பதற்குரிய கவிதை தொகுப்பு உங்களுடைய நினைவுகளையும் பகிர்ந்து கொள்ள pallimunaip@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்)