உருவு கண்டு எள்ளாமை வேண்டும் – புனித ஜோசப் வாசு அடிகளார்

“உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து”


உருளுகின்ற பெரிய தேருக்கு அச்சாணிபோல நின்று காப்பவரையும் உலகம் உடையது; அதனால் ஒருவரது உருவத்தைப் பார்த்து இகழக் கூடாது என்ற குரலுக்கு அமைவாக புனித யோசப் வாசு இந்தியாவின் கோவாவில் பிறந்து இலங்கையின் கத்தோலிக்கநம்பிக்கை ஒல்லாந்தரால் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டிருந்த வேளையில் இலங்கை கத்தோலிக்கருக்கு சேவைசெய்வதற்கு வந்த கத்தோலிக்க குருவானவர் ஆவார். இவர் ஈழத்தில் யோசேவாஸ் முனீந்திரர் எனவும் அழைக்கப்பட்டார். பிற்காலத்தில் இவர் கண்டி இராச்சியத்தில்தங்கியிருந்து இலங்கையில் கத்தோலிக்க திருச்சபையை மீளமைத்தார்.

கிபி   1685 ஆம் ஆண்டில் கோவாவின் Oratary of St. Philip Neri இல் இணைந்த யோசப் வாஸ் அடிகளார்  1687 ஆம் ஆண்டு ஏப்ரலில் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். அப்போது இலங்கையில் ஆட்சியில் இருந்த ஒல்லாந்தர் காலணித்துவம் பின்பற்றியவர்கள். எனவே கத்தோலிக்கரையும், குருமாரையும் கொலை செய்தனர். பாடசாலைகளைத் தரைமட்டமாக்கினர். இதனால் பிச்சைக்கார வேடத்தில் இலங்கை வந்த அடிகளாருக்கு சில்லாலையூர் மக்களே புகலிடம் வழங்கினார்கள். அவர் அங்கேயே தங்கி சில்லாலையிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் கத்தோலிக்க மக்களுக்கு தனது சேவையை வழங்கினார். பின்னர் அவர் மாறுவேடத்தில் கால்நடையில், 24 ஆண்டுகளாகப் வன்னி, புத்தளம், மன்னார்,ஆகிய இடங்களுக்கும் சென்று மதப்பிரசாரம் செய்தார்.

1692 இல் கண்டிக்குச் சென்ற வாஸ் அடிகளார், அங்கு றோமன்-கத்தாலிக்க மதத்தை மீளத் தாபிக்கப் பெருமுயற்சி செய்தார். இதனால் அவர் அங்கு இரண்டாண்டுகள் சிறையிலும் இருக்க நேரிட்டது. கண்டியிலிருந்தே தனது சேவையைத் தொடர்ந்த வாஸ் அடிகள் 1696 இல் இலங்கையின் Vicar-General பதவியைப் பெற்றார். 1710 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு தாண்டவன்வெளி பரி. வியாகுலமாதா கோயில் வளவில் சிறு ஓலைக் கோயில் கட்டிப் பலி ஒப்புக் கொடுக்கும் போது காட்டிக் கொடுக்கப்பட்டு மரத்தில் கட்டி அடிக்கப்பட்டார். 1711 ஆம் ஆண்டில் கண்டியில் காலமானார்.

கத்தோலிக்கர்களுக்கு இவர் ஆற்றிய பணிகளுக்காக இவர் இலங்கையின் திருத்தூதர் என அழைக்கப்பட்டார். 1995 சனவரி 21 ஆம் நாள் கொழும்பு நகரில் இவருக்கு திருத்தந்தை இரண்டாம் அருளாளர் பட்டம் வழங்கினார். 2015 சனவரி 14 அன்று திருத்தந்தை பிரான்சிசு காலிமுகத் திடலில் வைத்து புனிதராகத் திருநிலைப்படுத்தினார்.

இச் சிறப்புக்கள் வாய்ந்த அடிகளாரது பணிகளை வெளிகொணரும் வகையில்   புனித பற்றிமா அன்னை தமிழ் ஆன்மீக பயணத்தின் பெரும் பணியாக ஜோசப் வாஸ் அடிகளாரின் வடமோடி கூத்தும் அதனை சிறப்பிக்கும் முகமான நூல் வெளியீடும் இடம்பெற்றது. இதன் படி அருட் தந்தை கனிஷீயஸ் ராஜ் குய்மர் பெலிக்ஸ் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்றதுடன் வடமோடி கூத்தில் பாத்திரமேற்று நடித்தமையும் முக்கியமான அம்சமாகும். இந்த நிகழ்வு சிறப்புற இடம்பெற அனுசரனை வழங்கியவர்களாக எமது பள்ளிமுனையை சேர்ந்தவர்களுமான பிரம்ரன் நகரில் தினுசா ரேக் அவுட் அண்ட் கேற்றரிங் உரிமையாருமான திரு அன்ரனி நோபேர்ட் அவர்களும் மருத்துவரும் கனடா மிஸிஸாக்காவில் சென் லூசியா மருத்துவ நிலைய உரிமையாளருமான வைத்தியர் ஜோன் பிகிராடோவும் பங்களிப்பு செய்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.